‘துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசி, இந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்’ என உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்து மதத்தின் மீது உங்களுக்குள்ள அதீத வெறுப்பே, உங்கள் சரிவுக்கு வழிவகுக்கும் உங்கள் முதல் சட்டப்பேரவை உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்துக்குரியது.
துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று நீங்கள் ஒருமுறை பொதுவெளியில் பேசி, இந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்.
எனவே, நீங்கள் அரசியலில் மென்மேலும் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெட்டி எறிந்துவிட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியம்.
இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவரவர் மத அடையாளங்களும் நம்பிக்கைகளும் அதிமுக்கியம் என்பதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.



