சமூக ஊடகங்களின் அடிமையாக்கும் வடிவமைப்புகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகப் புதிய ஒழுங்குவிதிகளை உருவாக்கி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
டிக்டொக், மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்கள் சிறுவர்களை அடிமையாக்கும் வடிவமைப்பைக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்றுத் தெரிவித்தார்.
கொபன்ஹேகனில் ஆற்றிய உரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட வான் டெர் லேயன், ‘தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல், அடிமைத்தனமான நடத்தை, இணையவழி கொடுமைப்படுத்துதல், பாலியல் ரீதியாகத் தூண்டுதல், சுரண்டல், தற்கொலை அபாயங்கள் என்பன வேகமாகப் பெருகி வருகின்றன’ என்றும் கூறியுள்ளார்.
இந்த அபாயங்கள் டிஜிட்டல் உலகின் யதார்த்தம். அவை தற்செயலானவை அல்ல. நமது பிள்ளைகளின் கவனத்தை ஒரு பண்டமாகக் கருதும் வணிக மாதிரிகளின் விளைவுகளே இவை.
இந்த ஆண்டின் இறுதியில் முன்மொழியப்படவுள்ள தனது டிஜிட்டல் நேர்மைச் சட்டத்தில், போதையூட்டும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வடிவமைப்பு நடைமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பாக இலக்கு வைக்கும்.
சமூக ஊடக அணுகலுக்கு ஒரு குறைந்தபட்ச வயதை நிர்ணயிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



