ஹன்டா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் சொகுசுக் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், பெரியளவிலான பரவலுக்குரிய எந்த அறிகுறியும் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
மட்ரிட்டில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டஉலக சுகாதார ஸ்தாபனத் தலைவர், நிலைமை மாறக்கூடும் என்றும், மேலும் பலருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எம்.வி. ஹொண்டியஸ் சொகுசு கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் தீவிலிருந்து புறப்பட்டு, நெதர்லாந்தின் ராட்டர்டாம் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எஞ்சியுள்ள 28 பயணிகள் குழுவுடன் இரண்டு விமானங்கள் நேற்று ஐந்தோவனில் தரையிறங்கியுள்ளன. ஆனால் இக் கப்பலில் பயணம் செய்த மூன்று பேர் உயிரிழந்தனர். அத்தோடு தாயகம் திரும்பிய அமெரிக்கர் ஒருவரும் பிரெஞ்சு நாட்டவர் ஒருவரும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், ஏழு பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட பயணிகளில் ஒருவருக்குச் சிகிச்சை அளித்த பிறகு, வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நெதர்லாந்து மருத்துவமனை ஒன்றின் 12 ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



