றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் கடைசி பந்தில் 2 விக்கெட்டுகளால் பரபரப்புத் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. நடப்புச் சம்பியன் பெங்களூரு ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி தற்போது 9 ஆவது இடத்தில் இருப்பதோடு ஏற்கனவே சென்னையிடம் தோல்வியுற்று கடைசி இடத்தில் இருக்கும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியும் பிளே ஓஃப் வாய்ப்பை இழந்தது. இந்த இரு அணிகளுமே இதுவரை ஆடிய 11 போட்டிகளில் தலா 8 போட்டிகளில் தோற்றிப்பதோடு 3 வெற்றிகளையே பெற்றுள்ளன.
ராய்ப்பூரில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மும்பை அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பதிலெடுத்தாடிய பெங்களூருவுக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தபோதும் அந்த அணி கடைசி ஓவருக்கு பெற வேண்டி இருந்த 15 ஓட்டங்களை கடைசி பந்தில் எட்டி வெற்றியீட்டியது. இதன்மூலம் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 167 ஓட்டங்களை எட்டியது.
இதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சுப்பர் ஜயன்ட்ஸ் அணி நிர்ணயித்த 204 ஓட்ட வெற்றி இலக்கை எட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்போது சென்னை அணியின் உர்வில் படேல் 13 பந்துகளில் அரைச்சதம் பெற்று ஐபிஎல் இல் அதிவேக அரைச் சதம் பெற்ற யுஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை சமன் செய்தார்.



