இலங்கை தற்போது தெற்காசியாவிலேயே இணையக் குற்றவாளிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறிவருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீனப் பிரஜைகள் பலர் இலங்கைக்குள் போலி வணிகப் பெயர்களில் நிறுவனங்களைப் பதிவு செய்து, வணிக விசாக்களைப் பெற்று தங்கியுள்ளனர். இவர்கள் உண்மையில் எந்த வணிகத்தையும் செய்யாமல், இலங்கையிலிருந்து கொண்டு சர்வதேச அளவில் சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் இவ்வளவு வெளிப்படையாக நடக்கும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருக்கிறார்களா? அல்லது அவர்களின் ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கிறதா? என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
முறையான முதலீட்டாளர்களை வரவேற்பதை விடுத்து, இவ்வாறான குற்றக் கும்பல்களுக்கு இடமளிப்பது நாட்டின் பொருளாதாரத்தையும், சர்வதேச நற்பெயரையும் சீரழிக்கும் என அவர் எச்சரித்தார்.கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இத்தகைய குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும், முறையான ஒழுங்குமுறைகள் இல்லாவிட்டால் இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என்றும் அவர் எச்சரித்தார்.
அண்மையில் தான் நீர்கொழும்பு பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த கருவாடு வாடி அமைத்து தொழில் செய்யும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதை அவதானித்ததாகக் கூறினார்.புதிய சட்டங்கள் மற்றும் நகர சபை கட்டுப்பாடுகள் என்ற பெயரில், காலம் காலமாகத் தொழில் செய்து வரும் 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அதிகாரிகள் பறிக்க முயல்வதாக அவர் குற்றம் சுமத்தினார்.ஒருபுறம் சீனக் கொள்ளைக் கும்பல்களுக்கு வசதி செய்து கொடுத்து, மறுபுறம் நாட்டின் பாரம்பரியத் தொழில்களைச் செய்யும் சாதாரண மக்களை நசுக்குவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் உடனடியாக இந்த இணையக் குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், முறையான விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அமில பிரசாத் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அண்மையில் கொள்ளுப்பிட்டி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 70 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் (சீன, வியட்நாம் மற்றும் தாய்வான் பிரஜைகள்) இணைய நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.



