வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இன்று (07) இரவு இலங்கை வருகை தரவுள்ளார்.
நாளையதினம் (08) அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் மு.ப. 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து மு.ப. 9.30 மணிக்கு இலங்கை மற்றும் வியட்நாம் ஜனாதிபதிகளின் கூட்டு ஊடக அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
மு.ப. 11.00 மணிக்கு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்யும் வியட்நாம் ஜனாதிபதி, அங்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாம் ஜனாதிபதி நாளையதினம் மு.ப 11.05 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன வரவேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வியட்நாம் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் இடையில் சிறியதொரு சந்திப்புக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சபா மண்டபத்திற்கு வருகை தரும் வியட்நாம் ஜனாதிபதி, சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் மு.ப 11.40 மணிக்கு அவர் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உரைநிகழ்த்தவிருப்பதுடன், பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்படுவார்.
வியட்நாம் ஜனாதிபதியின் வருகையையிட்டு இன்று (07) இரவு முதல் நாளை (08) மாலை மீண்டும் அவர் நாடு திரும்பும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாளை (08) ஜனாதிபதி செயலக பகுதியிலும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பாராளுமன்றம் வரையும் அதன் பின்னர் பிற்பகல் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் வரையும் விசேட போக்குவரத்து ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



