2ஆவது இன்னிங்ஸில் 183 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது தம்புள்ளை அணி

1 Min Read

கொழும்பு அணிக்கு எதிரான தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் தம்புள்ளை அணி 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 183 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (05) முதல் இன்னிங்ஸில் 76 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையிலேயே தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

எனினும் ஆரம்ப வரிசையில் வீரர்கள் நின்றுபிடித்து ஆடத் தவறினர். ஆரம்ப விக்கெட்டுக்கு நிஷான் மதுஷங்க (43) மற்றும் விஷாட் ரன்திக்க (21) 56 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட நிலையில் மேலும் 33 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்நிலையில் நேற்றைய நாள் ஆட்டநேர முடிவின்போது தம்புள்ளை அணி 34.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன்போது கொழும்பு அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் சமோத் பட்டகே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 183 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் கொழும்புக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளை அணி முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சரித் அசலங்க தலைமையிலான கொழும்பு அணியால் முதல் இன்னிங்ஸில் 146 ஓட்டங்களையே பெற முடிந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *