அமெரிக்காவுடனான போருக்கு முடிவு காணும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரான் புதிய முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அந்த முன்மொழிவில் திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முன்மொழிவு பாகிஸ்தான் நடுவர் குழுவின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை எனவும், ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், “அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் அது எனக்கு திருப்தியளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, முன்னதாக முன்வைக்கப்பட்டிருந்த கடல் முற்றுகை நடவடிக்கையை அமெரிக்கா முதலில் நீக்க வேண்டும் எனும் நிபந்தனை இந்த புதிய முன்மொழிவில் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முதலில் திறக்க தயாராக இருப்பதையும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா குறித்த முற்றுகை நீக்கத்தை அறிவிக்கலாம் எனும் வகையில் அதிக நெகிழ்வுத்தன்மை குறித்தமுன்மொழிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்புகளும் குற்றச்சாட்டுகளை பரிமாறிக்கொண்டுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னேறும் என்பது குறித்து இன்னும் தெளிவில்லாத நிலை தொடர்கிறது.



