இரண்டு மாத போரை தீர்ப்பதற்கு ஈரான் முன்வைத்திருக்கும் புதிய முன்மொழிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் மேலும் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புதிய முன்மொழிவின்படி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு வளைகுடா கப்பல் போக்குவரத்து விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரையில் ஈரானிய அணுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை பிற்போடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவின் அதிருப்திக்கு காரணமாகியுள்ளது. அணு விவகாரம் ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுவதோடு டிரம்பின் அதிருப்திக்கு இதுவே காரணமாகியுள்ளது. ஜனாதிபதி தனது ஆலோசகர்களுடன் கடந்த திங்களன்று நடத்திய சந்திப்பு குறித்து தகவல் அறிந்த ஒரு அமெரிக்க அதிகாரி, பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசுகையில் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.
‘அமெரிக்கா ஊடகங்கள் மூலம் பேச்சுவார்த்தையை நடத்தாது’ என்று குறிப்பிட்ட வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒலிவியா வேல்ஸ், ‘எங்களுடைய மாற்ற முடியாத நிபந்தனைகள் குறித்து ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம்’ என்றும் தெரிவித்தார். அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பெப்ரவரியில் ஈரானுக்கு எதிராக ஆரம்பித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இடையே கடந்த 2015 இல் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை, ஈரானின் அணுத் திட்டத்தை கடுமையாக கட்டுப்படுத்துவதாக இருந்தது. எனினும் டிரம்ப் ஜனாதிபதியாக தனது முதலாவது தவணையின்போது தன்னிச்சையாக விலகினார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்ட இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையும் கைவிடப்பட்ட சூழலில் மீண்டும் அந்தப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான நம்பிக்கை குறைந்து வருகிறது.
மறுபுறம் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் இருபது வீத பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கி இருப்பது மற்றும் ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை நீடித்து வருவது பதற்றம் நீடிக்கக் காரணமாகியுள்ளது. அண்மைய நாட்களில் ஈரானிய எண்ணெயை ஏற்றிய குறைந்தது ஆறு கப்பல்களை அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்கு மீண்டும் திருப்பி அனுப்பி இருப்பதாக கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள் காண்பித்துள்ளன. ஈரானுடன் தொடர்புபட்ட கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியதை கண்டித்திருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இது ‘ஆழ்கடலில் கடற்கொள்ளை மற்றும் ஆயுதக் கொள்ளையை முழுமையாக சட்டப்பூர்வமாக்குவதாக உள்ளது’ என்று சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறுகலான கடல்வழி பாதையாக உள்ள ஹொர்முஸ் நீரிணை வழியாக போருக்கு முன்னர் தினசரி 125 தொடக்கம் 140 கப்பல்பகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தபோதும் கடந்த திங்கட்கிழமை மாத்திரம் ஏழு கப்பல்களே அதன் வழியாக பயணித்திருப்பதாக கப்பல் பயண தரவு அமைப்பான கிப்ளர் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு கப்பல் கூட சர்வதேச சந்தைக்கு எண்ணெயை கொண்டு செல்வதாக இருக்கவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகாரித்து வருகிறது.
மறுபுறம் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு ஹிஸ்புல்லா அமைப்பின் பதில் தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுக்கு இடையே அமெரிக்க மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் லெபனானில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை நடத்திய வான் தாக்குதலில் ஒரு பெண் உட்பட நால்வர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 51 பேர் காயமடைந்திருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குகின்றனர்.



