சர்வதேச மே தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதனை யொட்டி கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு உட்பட அதனை அண்டிய நகரங்களில் முக்கியமான கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறவுள்ள அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே தின நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சூழலை உருவாக்குதல், பாதுகாப்பு வழங்குதல், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயற்படுத்துதல் ஆகியவற்றுடன், வழமையான வாகனப் போக்குவரத்துகளைச் சீராகப் பேணுவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிமாவட்டங்களில் நடைபெறும் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்குப் பொலிஸ் மா அதிபர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் மகரகமையில் நடைபெறுவதுடன் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் நடத்தப்படவுள்ள பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் பிரதேசங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



