இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் துஷார

1 Min Read

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார, இந்திய பிரீமியர் லீக்கில் பங்கேற்பதற்கு அனுமதி கோரி இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

இந்திய பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்றிதழை வழங்குதவற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே துஷார மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (23) விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎல் தொடரில் பல போட்டிகளும் தற்போது நிறைவடைந்திருப்பதால் இந்த மனுவை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மனுதாரர் எதிர்பார்க்கவில்லை என்று துஷாரவின் வழக்கறிஞர் ஜி.ஜி. அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்த நீதிமன்றம் அந்த வழக்கை அகற்றிக்கொண்டது. நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் றோயல் சலங்சர்ஸ் அணியில் ஆட நுவன் துஷார இந்திய நாணயப்படி 1.60 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தமானார். எனினும் இலங்கை கிரிக்கெட் சபை அறிமுகம் செய்த கண்டிப்பான உடல் தகுதி சோதனையில் தோல்வி அடைந்ததால் அவருக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை மறுத்தது.

இதனையடுத்தே துஷார நீதிமன்றம் சென்றதோடு துஷார தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எதிராக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் சென்றதற்கு முன்னதாக துஷார இலங்கை கிரிக்கெட் சபையிடம் மன்னிப்புக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *