வட ஜப்பானின் கடற்பரப்பில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, 3 மீற்றர் (10 அடி) வரை உயரக்கூடிய அலைகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஜப்பான் வானிலை ஆய்வு முகவரகத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 4:53 மணிக்கு ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் உள்ள இவாடே மாகாணத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஏற்பட்டது. இது பரந்த பகுதி முழுவதும் உணரப்பட்டதுடன், தெற்கே நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் (மைல்கள்) தொலைவில் உள்ள டோக்கியோவில் கட்டிடங்களையும் உலுக்கியது.

முதல் சுனாமி அலைகள் உடனடியாக வடக்குக் கடற்கரையின் சில பகுதிகளை அடையக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மத்திய நிலையம் எச்சரித்தது.”கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் இருந்து உயரமான இடங்கள் அல்லது வெளியேற்றக் கட்டிடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுங்கள்’ என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், தயவுசெய்து உயரமானதும், பாதுகாப்பான இடங்களான மேடான பகுதிகளுக்கு வெளியேறுங்கள் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் சனே டகாயிச்சி, அரசாங்கம் ஒரு நெருக்கடி மேலாண்மைக் குழுவை அமைத்துள்ளதாகவும், நிலநடுக்கத்தின் தாக்கத்தை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.



