தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்காக பல முனை போட்டி அனைவரையும் ஒற்றுமைப்படுத்த ஜஸ்வர் உமர் உறுதி

2 Min Read

தேசிய ஒலிம்பிக் குழு வரலாற்றில் மிகப் பெரிய பல முனைப் போட்டியாக தலைவர் பதவிக்கு ஐவர் போட்டியிடவுள்ளனர். வரலாறு முழுவதும் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் தேர்தல்களில் தலைவர் பதவிக்கு அதிகபட்சமாக இருவர் மாத்திரமே போட்டியிடடு இருப்பதோடு, இம்முறை 5 சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்து தலைமை பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் 11 பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவிருப்பதோடு, அதற்காக 34 பிரதிநிதிகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக தலைமைப் பதவியில் இருந்த தற்போதைய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் திருத்தப்பட்ட விளையாட்டுச் சட்டத்திற்கு அமைய மீண்டும் போட்டியிடவில்லை என்பதோடு, அவர் போட்டியில் இடம்பெறாத நிலையிலேயே பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 22 ஆண்டுகள் ஒலிம்பிக் தலைமை பதவியை வகித்த ஹேமசிறி பெர்னாண்டோ போட்டி இன்றி அந்தப் பதவியில் செயற்பட்டதோடு, அதன் பின்னர் இரு தேர்தல்களில் தலைமை பதவிக்கு இருவர் இடையே போட்டி இருந்தது.

இம்முறை ஒலிம்பிக் தேர்தலில் தலைமை பதவிக்கு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், தற்போதைய உப தலைவர் மற்றும் இலங்கை தேசிய துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் உப தலைவர் ஷிரன்த பீரிஸ் மற்றும் ஸ்கீ மற்றும் ஸ்னோபோட் சம்மேளனத்தின் தலைவர் தேவா ஹென்றி, பேஸ்பொல் சங்கத்தின் தலைவர் அசங்க செனவிரத்ன, கெனொய்ன் மற்றும் காயகின் சங்கத்தின் உறுப்பினர் ரொஹான் பிரீதி விராஜ் பெரேரா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் அசங்க செனவிரத்ன மற்றும் பிரீதி விராஜ் ஆகியோர் இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரதும் ஒலிம்பிக்கு குழு தேர்தலில் உப தலைவர் போட்டிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்தி இருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை ஒலிம்பிக் குழு தேர்தலில் தலைமைப் பதவிக்கு பெரும்பாலான சங்கங்கள் இணைந்து நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பொது வேட்பாளராக தம்மை தேர்வு செய்தது தொடர்பில் அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக தலைமை போட்டியில் உள்ள ஜஸ்வர் உமர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தத் தேர்தலில் கடும் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தாம் வெற்றியீட்டிய பின்னர் 24 மணி நேரத்திற்குள் தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய தலைவர் உட்பட அனைத்து சங்கங்களின் தலைவர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பிற்பகல் 4 இற்கு ஒலிம்பிக் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *