LPG தட்டுப்பாட்டால் சென்னை ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய HCL நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஹார்மோஸ் நீரிணையால் எரிபொருள் தட்டுப்பாடு
போர் காரணமாக உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளது.
இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் LPG, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மக்கள் காலி LPG சிலிண்டர்களுடன் சிலிண்டர் நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர். அதே போல், பெட்ரோல், டீசல் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப நிலையங்களில் குவிந்துள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் சில உணவகங்கள் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளன.
WFH வழங்கிய HCL
இந்நிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான HCL நிறுவனத்தில் அதன் அலுவலகத்தில் LPG தட்டுப்பாடு காரணமாக ஊழியர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக ஊழியர்களை இரு நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதே போல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகம் வரும் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவித்து, விடுதியில் உள்ள மாணவர்களை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

இந்த தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் பல நிறுவனங்கள் WFH முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன.
மேலும், பள்ளி கல்லூரிகளை மூடிவிட்டு இணைய வழியில் வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளன.
அமைச்சர் விளக்கம்
இந்தியாவிற்கு வரும் கப்பல்களுக்கு ஹார்மோஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தட்டுப்பாடு அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

அதேவேளையில் மக்களவையில் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும், வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது. பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.
எல்பிஜி உற்பத்தி கடந்த சில நாட்களில் 28% அதிகரித்துள்ளது. நாட்டுக்கு தேவையான அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது” என விளக்கமளித்துள்ளார்.




