எல் நினோ காலநிலை; எதிர்வரும் மாதங்களில் 900 மில்லி மீற்றர் மழை

1 Min Read

தித்வா சூறாவளியின் போது இடம்பெற்ற 600 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கே பாரிய அனர்த்தங்களை நாடு எதிர்கொள்ள நேர்ந்தது என்றும் எல் நினோ காலநிலையால் எதிர்வரும் மாதங்களில் பெய்யும் 900 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை நாடும் மக்களும் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? என தமிழரசுக் கட்சி எம்.பி பி. சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

அதனைக் கவனத்திற் கொண்டு அரசாங்கம் எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னாயத்தங்களை இப்போதிருந்தே முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விலங்குகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகால் சபை திருத்தச் சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எதிர்கொள்ள உள்ள எல்நினோ காலநிலை பாதிப்பு தொடர்பில் நோக்கும்போது, நாட்டில் 600 மில்லி மீற்றர் மழையினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டு அதிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இவ்வாறான நிலையில் 900 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி குறுகிய காலத்தில் இடம்பெறும் பட்சத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் அதனை தாங்கக்கூடிய சக்தி கிடையாது.

இதனால் நாம் இப்போதிருந்தே மழை நீர் வழிந்தோடும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்களை அகற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் பாரிய அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *