நுவரெலியா – கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், வேட்டைக்காரர் ஒருவரால் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய நிலையில் காணப்பட்ட வளர்ந்த மலைச் சிறுத்தை ஒன்று இன்று (06) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் கால்நடை வைத்தியர் அகலங்க பிணிதிய ஆகியோர் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (05) மாலை சுமார் 5.00 மணியளவில், மலைச் சிறுத்தை ஒன்று வலையில் சிக்கியிருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் அவதானித்து, தோட்ட முகாமையாளருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் அவர் நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலகத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்திய அதிகாரிகள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும், மனிதாபிமான காரணங்களைக் கருத்தில் கொண்டு ரந்தெனிகலவில் இருந்து வருகை தந்து, மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டதாக வைத்தியர் அகலங்க பிணிதிய தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட மலைச் சிறுத்தை சுமார் 4 வயதுடைய பெண் சிறுத்தை எனவும், அதன் வயிற்றுப் பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் இரண்டு கம்பி வலைகள் சிக்கியதால் காயமடைந்து கடும் வேதனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், மீட்கப்பட்ட சிறுத்தை தற்போது கால்நடை வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் அகலங்க பிணிதிய மேலும் தெரிவித்தார்.




