ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு வகையான சட்ட விரோதப் போதைப்பொருட்களையும் பங்களாதேசததிற்குள் கடத்தி வருவதற்காக நாட்டின் 18 மாவட்டங்களில் உள்ள சுமார் 105 எல்லைப்புற வழிகள் பயன்படுத்தப்படுவதாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடனான மேற்கு மற்றும் வடக்கு எல்லைகள், மியான்மர் நாட்டின் தென்கிழக்கு எல்லை ஆகிய மூன்றும் பங்களாதேசத்திற்குள் போதைப்பொருட்களைக் கடத்தி வருவதற்காகப் பயன்படுத்தப்படும் முக்கிய வழித்தடங்களாக விளங்குவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
பங்களாதேசமானது இந்தியாவுடன் 4,156 கிலோ மீற்றர் எல்லையையும், மியான்மருடன் 271 கிலோ மீற்றர் எல்லையையும் பகிர்ந்து கொள்ளும் நாடாகும். போதைப்பொருட்களைக் கொண்டு வரவென, கடத்தல்காரர்கள் தரைவழி எல்லைகளையும், கடலோர மற்றும் ஆற்றுப் பாதைகளையும் பயன்படுத்துகின்றனர். அதன் காரணத்தினால் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களைக் கட்டுப்படுத்தவென எல்லைப்புறப் பிரதேசங்களின் உளவு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவிருப்பதாகவும் அதற்கேற்ப போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.
த டெய்லி ஸ்டார்.




