ஜன நாயகன் வெளியீட்டுக்கு அரசு விடுமுறையா?

1 View
1 Min Read

தமிழக முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியிடுகிற நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ்நாட்டில் த.வெ‌.க. ஆட்சி வராது என நினைத்து, சாத்தியமே இல்லாத, செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம், நிதி ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல்,கானல் நீரைப் போன்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்திருந்தார்.

அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். இப்போது யாருமே, ஏன் விஜய்யே எதிர்பார்க்காமல், தவெ‌க ஆட்சி அமைத்து 75 நாட்களைக் கடந்து சென்றுவிட்டாலும், ஆட்சி அமைத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையோ என்று நமக்கு தோன்றுகிறது.

தேர்தல் அறிக்கையில் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது ஆட்சியமைந்தவுடன் 500 யூனிட் வரை உபயோகிக்கும் மின் பயனாளர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரக் கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பு, நடைமுறையிலே வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கிறது.

தற்போது, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை த.வெ.க. அரசு அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 4,41,667 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினால், இதற்கான தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூபாய் 580.79 கோடி. இதனோடு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, ஆகியவற்றை சேர்த்தால் மொத்த செலவு 750 கோடி ஒதுக்கீடு செய்வதாக கூறப்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தாய்மாமன் திட்டம் எவ்வளவு பங்களிக்க முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.ஜன நாயகன் பட வெளியீட்டு விழாவை, திருவிழாபோல கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்திருக்கும் அமைச்சர் ஆனந்த், அடுத்த அதிரடி அறிவிப்பாக ஜன நாயகன் திரைப்படம் வெளியிடுகிற நாளில், அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *