சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனமானது இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் வாகன உதிரிப்பாக துறையில், நிறுவனத்தின் முன்னணி நிலையை உறுதிப்படுத்தும் முக்கிய அங்கீகாரமாக இலங்கையின் முதலாவது வாகன தொழில்துறை விருதுகள் நிகழ்வில் ‘உதிரிப்பாக உற்பத்தியாளர்’ பிரிவில் சிறந்த டயர் உற்பத்தியாளர் விருதை பெற்றுள்ளது.
இலங்கை வாகனத்துறை பேரவையினால் (AIC) அலரி மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தொழில்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வாகனத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். சிறப்புத் திறன், புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அளவிலான தளமாக உருவாக்கப்பட்ட இந்த விருதுகள் தொழில்நுட்ப முன்னேற்றம், சந்தை தாக்கம், வாடிக்கையாளர் திருப்தி, மற்றும் தொழில்துறை தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் செயல்திறனை மதிப்பீடு செய்கின்றன.
இந்த அங்கீகாரமானது அசல் சாதன (OE) டயர் சந்தையில் சியெட் களனி பெற்றுள்ள ஆதிக்கமான நிலையை பிரதிபலிக்கிறது. இலங்கையில் பொருத்தப்படும் வாகனங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுக்கு தேவையான டயர்களை நிறுவனம் வழங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு தனது முதல் OE டயர் வழங்கலின் மூலம் உள்ளூர் வாகன உதிரிப்பாகத் துறையில் காலடி எடுத்து வைத்த சியெட் நிறுவனமானது மிகக் குறுகிய காலத்திலேயே வாகன உற்பத்தியாளர்களின் விருப்பமான டயர் பங்காளராக உருவெடுத்துள்ளது.




