ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு வெற்றிகரமான இறுதி ஒப்பந்தத்திற்கு மிக சிறந்த அடித்தளம் இடப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானில் மசகு எண்ணெய் உற்பத்தி, பெற்றோலிய இரசாயனப் பொருட்கள் விநியோகம் என்பவற்றுக்கு அமெரிக்க திறைசேரி, அங்கீகாரம்
வழங்கியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை இந்த அனுமதி அமுலில் இருக்கும். ஈரான், அமெரிக்காவுக்கிடையிலான நிரந்தர யுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நேற்று நிறைவுற்றதைத் தொடர்ந்து ஈரானிய ஜனாதிபதி மசூட் பெசஷ்கியான் ஒரு நாள் விஜயமாக இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஈரானிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய உப ஜனாதிபதி வான்ஸ், இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவுற்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை மிகவும் நல்ல நாளாக அமைந்தது. எதிர்வரும் நாட்களில் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் தொடரும். நாங்கள் அடித்தளத்தை அமைத்துள்ளோம். வீட்டைக் கட்டவில்லை. ஆனால் அமெரிக்க மக்கள் ஒரு நல்ல நிலையை அடைய ஒரு வெற்றிகரமான அடித்தளத்தை அமைத்துள்ளோம், இது அமெரிக்க மக்களுக்கு ஒரு முக்கிய மைல்கல், மேலும் ஈரானில் அணு ஆயுதத் திட்டத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாகும், நாங்கள் செய்ய விரும்பியது இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முஹமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கூறுகையில், அமெரிக்க மற்றும் ஈரானிய ஜனாதிபதிகளால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், நாங்கள் போரை நிறுத்தும் நிலையை எட்டியுள்ளோம்.




