ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

1 Min Read

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளவும் வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று நண்பகல் பாரிய அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கட்சி (Social Justice Party), பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப் போராட்டத்தில், மனித உரிமைப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள் “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் யார்? ஒட்டுமொத்த தேசமும் அறிய விரும்புகிறது!”, “உண்மையை புதைக்க முடியாது, நீதி வெல்ல வேண்டும்!” (Truth cannot be buried, Justice must prevail!) மற்றும் “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு தடையை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துக!” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு விசாரணைகளின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தினர்.

மேலும், இந்த அமைதிப் போராட்டத்தில் இஸ்லாமிய பாரம்பரிய ஆடை அணிந்த கணிசமான இஸ்லாமிய பெண்கள் முன்னணியில் நின்று சுலோக அட்டைகளை ஏந்தியவாறு நீதிக்காக குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

போராட்டக் களத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதான பதாகையில், “ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் பாரபட்சமற்ற விசாரணைக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முழு ஆதரவு உண்டு!” என்ற வாசகம் மும்மொழிகளிலும் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க தமிழ், சிங்கள மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் என்றும் நிபந்தனையற்ற முழுமையான ஆதரவை வழங்கும் என இதன்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *