சொத்து,பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க 15 நாட்களே அவகாசம்

1 Min Read

2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இவ்வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ், வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரிவினர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் சொத்து விபரங்களை சமர்ப்பித்தவர்களும், புதிய சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட புதிய வகை அதிகாரிகளும் இந்த ஆண்டு முதல் மத்திய இலத்திரனியல் முறைமையின் ஊடாக மாத்திரமே தமது விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்எஸ்டி ஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தின் கீழ் பின்வரும் தரப்பினர் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவது அவசியமாகும்:

  • பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள்
  • பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்
  • தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்
  • தேசிய விளையாட்டுச் சங்கங்களின் உத்தியோகத்தர்கள்
  • சுங்கத் திணைக்கள அதிகாரிகள்

அனைத்து விபரங்களும் https://aldciabocgovlk/ என்ற இணையத்தள முகவரியின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2026 மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படியான சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள், ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இன்றைய திகதியில் (15) இருந்து, இந்த விபரங்களை சமர்ப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்பதை ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0767011954 அல்லது 0112587287 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இலங்கையிலிருந்து ஊழலை ஒழிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *