ETC வசதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி

2 Min Read

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணமாகவோ அல்லது அட்டை மூலமாகவோ சுங்கக் கட்டணங்களைச் செலுத்தும் வசதிக்கு மேலதிகமாக, ETC (Electronic Toll Collection) வசதியும் நடைமுறையில் உள்ளது.

ETC பயனர்கள் எவ்விதத் தாமதமுமின்றி நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பிரத்தியேக வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலின்றிப் பயணிக்க முடிகிறது.

ETC வசதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு அவர்கள் பயணிக்கும் ஒவ்வொரு தடவைக்கும் (Every travel term) செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்திலிருந்து 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தற்போது பேலியகொட, கெரவலபிட்டிய, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க ஆகிய பரிமாற்ற மையங்களில் (Exchanges) இந்த ETC வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, கடவத்தை சுற்றுவட்ட வீதி வழியாகக் கட்டுநாயக்க நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களின் வசதிக்காக கடவத்தை பரிமாற்ற மையத்திலும் (Kadawatha Interexchange Center) இவ்வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலம் ETC வசதியைப் பெறுவதற்குப் பல இடங்களுக்குச் சென்று வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர வளர்ச்சி அமைச்சும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து புதிய இணையவழிப் பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

வாகன உரிமையாளர்கள் இப்போது www.exway.rda.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் மிக எளிதாகப் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

பதிவின் பின்னர் தமக்கு அருகிலுள்ள பரிமாற்ற மையத்திலிருந்து RFID Tag ஐப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த இணையத்தளம் அல்லது Govpay செயலி மூலம் உங்களது வங்கி அட்டையைப் பயன்படுத்தி கணக்கிற்குப் பணம் செலுத்தலாம். இதன் மூலம் எவ்விதத் தடங்கலுமின்றி நெடுஞ்சாலைக் கட்டணங்கள் கணக்கிலிருந்து தானாகவே கழித்துக்கொள்ளப்படும்.

ETC வசதியைப் பயன்படுத்தும் போது எவ்விதத் தொழில்நுட்பக் கோளாறுகளும் இன்றிச் சீராகப் பயணிப்பதற்கு வாகன சாரதிகள் பின்வரும் விதிமுறைகளைப் பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது:

நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் ETC பகுதிகளில் வாகனத்தின் வேகத்தை மணிக்கு 15 கிலோமீட்டர் என்ற அளவில் பேண வேண்டும்.
உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே குறைந்தது 20 மீட்டர் ) இடைவெளியைப் பேண வேண்டும்.

இது குறித்துப் பயணிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட விழிப்புணர்வுத் திட்டமொன்றும் இன்று (15) நெடுஞ்சாலைப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *