மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 37 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 1–1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.
கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று (14) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணிக்கு கமில் மிஷார முதல் வரிசையில் 40 பந்துகளில் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களை விளாசினார். தொடர்ந்து தசுன் ஷானக்க 24 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 58 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த மேற்கிந்திய தீவுகள் முதல் இரு விக்கெட்டுகளையும் 9 ஓட்டங்களில் இழந்தது. மத்திய வரிசையும் நிலைத்து ஆடவில்லை. குறிப்பாக துஷ்மன்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு துனித் வெள்ளாலகே இரு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணி சார்பில் ரோவ்மன் பவல் அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றார்.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இலங்கை நேரப்படி இன்று (15) காலை 6 மணிக்கு அதே, கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.



