மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான இரண்டாவது பயிற்சிப் போட்டியிலும் இலங்கை அணி நெதர்லாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.
இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டி நாளை (12) பெர்மிங்ஹாமில் இடம்பெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி நேற்று முன்தினம் (09) நெதர்லாந்தை எதிர்கொண்டது.
டர்பியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் ஆறு விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீராங்கனை ஹீதர் சிகர் 32 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்றார். இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர் அணிக்கு மத்திய வரிசையில் ஹன்சிமா கருணாரத்ன 42 பந்துகளில் 6 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து ஓய்வு எடுத்துக் கொண்டார். முன்னதாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் 58 பந்துகளில் 94 ஓட்டங்களை விளாசினார்.
இலங்கை மகளிர் அணி பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



