மத்திய இஸ்ரேலில் நேற்று நடந்த சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில், 35 வயதான நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மற்றவர்கள் இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய மீட்பு சேவையான மேகன் டேவிட் அடோம் குறிப்பிட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும் அடோம் மேலும் கூறியுள்ளது.
துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரைத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகிக்கப்படும் அத்துப்பாக்கிதாரி, இஸ்ரேலிய நகரமான தாயிபேயைச் சேர்ந்த, இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற ஒரு பலஸ்தீனியர் என்று அவர்கள் கூறினர்.
பொலிஸாரும், எல்லைக் காவல்படை வீரர்கள் மற்றும் சிறப்புப் பிரிவினரும் ஏனைய சந்தேக நபர்களைத் தேடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்திய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் பொலிஸ் கூறியுள்ளது.



