இஸ்ரேலும் லெபனானும் தங்களது உறுதியற்ற போர் நிறுத்தத்தைப் புதுப்பிக்கவும், லெபனானுக்குள் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்குத் தடை விதிக்கும் பல மாதிரி பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும். அத்தோடு பிற நிபந்தனைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்காகக் கொண்ட பேச்சுவார்த்தை இரு நாடுகளது பிரதிநிதிகளுக்கும் இடையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில், எந்தவொரு அரசோ அல்லது அரசு சாரா அமைப்போ லெபனானின் எதிர்காலத்தைப் பணயக்கைதியாக வைத்திருக்க முயற்சிப்பதை மூன்று நாடுகளும் நிராகரித்துள்ளன.
தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதற்கும், வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ரொக்கெட்டுகளை வீசியதற்கும் பிறகு, வொஷிங்டனில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. என்றாலும் லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்ததாகவும், குறைந்தது ஒரு தாக்குதலாவது உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் லெபனான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா, லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த குழுவாகும். அது லெபனான் இராணுவத்தை விட வலிமையான ஒரு ஆயுதப் படையை உருவாக்கியுள்ளதுடன், இஸ்ரேலுடன் தொடர்ச்சியான மோதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளால் ஹிஸ்புல்லா ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.
இந்த ஒப்பந்தத்தின் படி, தற்போது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள, இஸ்ரேலிய எல்லைக்கும் வடக்கே சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லிட்டானி நதிக்கும் இடையிலான பகுதியிலிருந்து அனைத்து ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்களையும் வெளியேற்றுவதை சார்ந்துள்ளது.
அரசு சாரா அனைத்து அமைப்புகளையும் தவிர்த்து, லெபனான் ஆயுதப் படைகள் அப்பகுதியின் பிரத்தியேக பாதுகாப்பு பொறுப்பை ஏற்பதோடு மாதிரி பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கு அமெரிக்கா வழிகாட்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி வலயங்கள் எங்கு அமைய வேண்டும் என்பதைக் குறிக்கும் எந்த வரைபடங்களையோ அல்லது அவை நடைமுறையில் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதற்கான எந்த விளக்கத்தையோ அது உள்ளடக்கவில்லை.
திங்களன்று அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்காமல் இருப்பதற்குப் பதிலாக, இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது குண்டுவீசுவதைத் தவிர்க்கும் என்று லெபனான் கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும் மோதல் நிறுத்தப்படவில்லை. வடக்கு இஸ்ரேலில் உள்ள சமூகங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தவும், லெபனானுக்குள் மேலும் ஆழமாக முன்னேறவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய இராணுவத்திற்கு கடந்த வாரம் உத்தரவிட்டார். இப்
போர் தொடங்கியதிலிருந்து லெபனானில் குறைந்தது 3,516 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் லெபனானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தவர்களாகத் தங்களைப் பதிவு செய்துள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. இப்போரின் போது எல்லையின் இருபுறமும் தனது 26 வீரர்களும் நான்கு இஸ்ரேலிய பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



