இலங்கை–மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் இன்று (03) நடைபெறவுள்ளது.
இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்ட நிலையில் அவரது தலைமையில் இலங்கை ஆடும் முதல் போட்டியாக இது அமையவுள்ளது. அத்துடன் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கரி கேர்ஸ்டன் நியமிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி ஆடும் முதல் போட்டியாகவும் இது அமையும்.
ஒருநாள் தொடர்களில் இலங்கை அணி அண்மைக் காலத்தில் சோபித்து வருவதோடு கடந்த 2024 தொடக்கம் இலங்கை அணி ஆடிய 12 ஒருநாள் தொடர்களில் எட்டுத் தொடர்களை வெல்ல முடிந்துள்ளது. எவ்வாறாயினும் கடைசியாக ஆடிய இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்கிந்திய தீவுகளில் இலங்கை அணி ஒருநாள் தொடர் ஒன்றில் ஆடுவது இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.
கடைசியாக அங்கு 2021 மார்ச் மாதம் ஆடிய 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 0–3 என இழந்திருந்தது.
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் இலங்கையை விடவும் 4 இடங்கள் பின்தங்கி 10 ஆவது இடத்தில் இருந்தபோதும் அது சொந்த மைதானத்தில் வலுவான அணியாகவே உள்ளது. அது கடைசியாக தனது சொந்த மண்ணில் ஆடிய நான்கு ஒருநாள் தொடர்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 2027 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது போராடி வரும் நிலையில் அந்த அணிக்கு இந்தத் தொடர் தீர்க்கமானதாக உள்ளது. மேற்கிந்திய தீவுகள் தற்போது ஒருநாள் தவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் நிலையில் தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கே உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே 10 மணி நேர வித்தியாசம் இருப்பதால் இன்றைய ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கே ஆரம்பமாகும்.



