விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் மரணம்

1 Min Read

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் விடுதி (ரெஸ்டாரன்ட்) ஒன்றின் அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிலியத்தை பஸ்ஸார வீதி, நியூ வில்லேஜ் பகுதியைச் சேர்ந்த 5 வயதான சந்தனி நிமாஷா மற்றும் 3 வயதான கசுன் மதுசங்க ஆகிய இரு சகோதர்களுமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த பிள்ளைகளின் தாயார் புற்றுநோய் சிகிச்சைக்ககாக காத்தான்குடி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். தாயாரை பார்ப்பதற்காக கடந்த 23ஆம் திகதி தந்தையுடன் இரு சிறுவர்களும் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள தனியார் விடுதியில் 3ஆவது மாடியில் வாடகைக்கு 107ஆவது அறை எடுத்து தங்கிருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று மாலை 4.00 மணியளவில் இரு பிள்ளைகளையும் அறையில் வைத்து பூட்டிவிட்டு தந்தையார் வெளிச் சென்று மீண்டும் அறைக்கு சென்ற போது அறையினுள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கதவை திறந்து கொண்டார்.

அறையினுள் புகை மூட்டத்திற்கு மத்தியில் இரு பிள்ளைகளும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *