அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் அணி மெக்சிகோவில் தங்கி இருப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிளவ்டியா செயின்பவும் இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரான் அணி அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு அந்த நாடு விருப்பத்தை வெளியிடாத நிலையில், ஈரான் அணி மெக்சிகோவில் முகாம் அமைப்பதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) அனுமதி கோரியதாக செயின்பவும் கடந்த திங்கட்கிழமை (25) குறிப்பிட்டார்.
‘அவர்கள் மெக்சிகோவில் தங்கி இருப்பதை நிராகரிப்பதற்கு எமக்கு எந்தக் காரணமும் இல்லை’ என்று அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார். உலகக் கிண்ணத்தில் ஈரான் தனது மூன்று குழு நிலை போட்டிகளையும் அமெரிக்காவில் ஆடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
எனினும் ஈரான் வீரர்கள் அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் அமெரிக்காவில் ஆடுவது பொருத்தமாக இருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். ஈரான் வீரர்களுக்கான அமெரிக்க விசாவும் இன்னும் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே ஈரான் உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி முகாமை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்றி இருந்தது. அரிசோனாவில் இருந்த அந்தப் பயிற்சி முகாம் மெக்சிகோவின் அமெரிக்க எல்லை நகரான டிஜீவானாவுக்கு மாற்றப்பட்டது.
‘ஈரான் அணி அமெரிக்காவில் தங்கி இருப்பதை அந்த நாடு விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அங்கு சென்று மூன்று போட்டிகளிலும் ஆடுவார்கள். எனவே, ஈரான் அணி இங்கே தங்குவதற்கு அவர்கள் அனுமதி கோரினோர். ஆம், அதில் பிரச்சினை இல்லை என்று நாம் குறிப்பிட்டோம்’ என்று மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் பிஃபா உலகக் கிண்ணத்தை அமெரிக்கா, கனடாவுடன் இணைந்து மெக்சிகோவும் நடத்துகிறது. இதில் ஜி குழுவில் இடம்பெற்றிருக்கும் ஈரான் தனது முதல் போட்டியை ஜூன் 15 இல் நியூசிலாந்தையும் இரண்டாவது போட்டியை; ஜூன் 21 இல் பெல்ஜியத்தையும் எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும். எகிப்துக்கு எதிராக ஜூன் 26 இல் நடைபெறும் மூன்றாவது போட்டி சியாட்டலில் இடம்பெறவுள்ளது.
ஈரான் உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் தெற்கு துருக்கியின், அன்டல்யாவில் பயிற்சி பெற்று வருகிறது.



