கொங்கோவில் எபோலா பரவல், தடுப்பு வேலைத்திட்டங்களை விடவும் வேகமாக இருப்பதால் அண்டை நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் அவசர நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறோம், ஆனால் தற்போதைக்கு இந்நோய்ப்பரவல் எங்களை விட வேகமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நோய்ப்பரவல் குறித்து ஆபிரிக்க ஒன்றியத்தின் இணையவழிக் கூட்டத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இந்த எபோலா நோய்ப்பரவலால் இதுவரை 220 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார அவசரகாலத் திட்ட நிர்வாக பணிப்பாளர் சிக்வே இஹெக்வேசுவுடன் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்குப் பயணம் செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளார். இடுரி மாகாணத்தில் உள்ள எபோலா சிகிச்சை நிலையங்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக அங்கிருந்த 18 எபோலா நோயாளர்கள் தப்பி ஓடினர். மோங்ப்வாலு நகரவாசிகள் மோங்ப்வாலு பொதுப் பரிந்துரை மருத்துவமனையையும் தாக்கினர்.
இத்தாக்குதல்களால் எபோலா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தடைபட்ட நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. த கார்டியன்



