வடமேற்கு பாகிஸ்தானில் நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது அதிவேகமாக வந்த வேனொன்று நேற்று மோதுண்டதில் 17 பேர் உயிரிழந்ததோடு 10 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸ் மற்றும் மீட்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சுவாட் நகரிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்ஸில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, நெடுஞ்சாலையோரத்தில் நின்றபோது இவ்விபத்து நிகழ்ந்தது. பயணிகள் வாகனத்திலிருந்து இறங்கி அருகில் காத்திருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று, கூட்டத்தின் மீதும் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் மீதும் மோதியது. இதனால் இந்த உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்பட்டதாக மீட்புப் பணி அதிகாரி பிலால் அகமது ஃபைசி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். ரெஸ்க்யூ 1122 அவசர சேவைகளின் பிரதம பணிப்பாளர் ஷா ஃபஹத் கூறுகையில், இவ்விபத்துக்கு சாரதியின் கவனக்குறைவே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்றுள்ளார்.
அரப் நியூஸ், ஏ.பி.சி நியூஸ்



