பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட பிரேசில் அணியில் முன்கள வீரர் நெய்மார் அழைக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் அணிக்காக மொத்தம் 79 கோல்களைப் பெற்று அந்த அணிக்கு அதிக கோல்கள் பெற்றவராக இருக்கும் 34 வயது நெய்மார், உபாதைகள் காரணமாக கடந்த 2023 தொடக்கம் பிரேசில் அணியில் இடம்பெறத் தவறிய நிலையிலேயே அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.
பயிற்சியாளர் கார்லோ இன்செலோட்டி தேர்வு செய்திருக்கும் பிரேசில் அணியில் அண்மைய ஆண்டுகளாக பிரதான வீரர்களாக மாறியிருக்கும் வின்சியஸ் ஜூனியர் மற்றும் ரபின்ஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நெய்மார் கடந்த திங்கள் வரை பிரேசில் அணிக்கு அழைக்கப்படாமல் இருந்தார்.
நெய்மார் அழைக்கப்பட்டதன் மூலம் அவர் தனது நான்காவது உலகக் கிண்ணத்தில் ஆடுவதற்கு வாய்ப்புப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் 2014, 2018 மற்றும் 2022 பிஃபா உலகக் கிண்ண போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பிரேசில் அணி சி குழுவில் இடம்பெற்றுள்ளது. ஐந்து முறை சம்பியனான அந்த அணி மொரோக்கோவை ஜூன் 13, ஹெய்ட்டியை ஜூன் 20 இல் எதிர்கொள்ளவிருப்பதோடு தனது இறுதி குழு நிலைப் போட்டியில் ஜூன் 24 ஆம் திகதி ஸ்கொட்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.



