சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் உடன் ஐபிஎல் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில் எஞ்சியுள்ள ஓர் இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.
சென்னை, எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் சென்னை அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட பறிகொடுத்தபோதும் மற்ற அணிகளின் முடிவுகள் தனக்கு சாதகமாக அமைந்தால் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமாக இருந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி பட் கமின்ஸின் பந்துவீச்சால் ஆரம்ப வரிசை விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களையே பெற்றது. ஹைத்ராபாத் அணித் தலைவர் கமின்ஸ் 4 ஓவர்களுக்கு 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய ஹைத்ராபாத் அணிக்கு இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 181 ஓட்டங்களை எட்டியது.



