தேசக் கட்டமைப்பின் இரண்டு தூண்கள்!

5 Min Read

ஒரு நாட்டின் சட்டங்களை இயற்றுதல், நீதியை நிலைநாட்டுதல், அதனூடாக ஒரு வலுவான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய பணிகளைச் செய்யும் முதன்மை அமைப்பே அரசாங்கமாகும். மேலும், மக்களை நல்வழிப்படுத்தி, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து, நாட்டை நிர்வகிப்பதற்கான தற்காலிக அல்லது நீண்டகால அதிகாரத்தைக் கொண்டுள்ள ஓர் உன்னத கட்டமைப்பே அரசாங்கம் (Government) என அழைக்கப்படும்.

ஆனால் மறு பக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பொதுச் சேவைகளை நடை முறைப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் (போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மின்சாரம், பாதுகாப்பு) போன்ற அரசுக்கு சொந்தமான நிதியில் இயங்கும் அல்லது நாட்டினுடைய நிர்வாகம் மற்றும் அபிவிருத்திகளுக்கு பொறுப்பான அமைப்புக்கள் அரச நிறுவனங்கள் (Public Institution/Agency) என வரையறுக்கப்படுகின்றன.

பொதுவாக சமூக நலனினை குறிக்கோளாக கொண்ட அரச நிறுவனங்கள், இலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல், கல்வி, சுகாதாரம், போக்குவரது மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பணிகளை அரச நிதி அல்லது மக்கள் வரிப்பணத்தில் செய்கின்றன. அத்தோடு, அரச அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ், அரசாங்க விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அதே நேரத்தில், பாராளுமன்றம் அல்லது அமைச்சரவைக்கு நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், அனைத்து அரச நிறுவனங்களும் அமைச்சரவை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களின் கொள்கை விளக்கங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். ஊழலற்ற, வினைத்திறன்மிக்க அரச சேவையை வழங்குவதென்றால்; நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அரசாங்க கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் பொது நலனுக்காகவும் செயற்படுபவர்களாகவும் நடைமுறைப் படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.

அரசாங்கமும் அரச நிறுவனங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடக்கம் சிற்றூழியர்கள் வரை ஒன்றுபட்டு செயற்படுகின்ற பொழுதுதான் ஒரு நாடு சீரான பொருளாதார வளர்ச்சியோடு, சகல அரச நிறுவனங்களும் நாட்டு மக்களுக்குமான ஊழலற்ற பொதுச்சேவைகளை வழங்கும் அமைப்பாக பரிணமிக்கும்.

அரச நிறுவனங்களில் காணப்படும் ஊழல்களையும் ஏனைய சட்டத்திற்கு புறம்பான சலுகைகளையும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அதிகளவில் கண்டுகொள்ளாத நிலவரமே நாட்டில் இருந்து வந்தது. அரசாங்கங்கள் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருப்பதற்காக அரச நிறுவனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதன் விளைவே என்பதே உண்மை.

இலங்கையில் தற்போது அநுர குமார திசாநாயக்க தலைமையிலான NPP (தேசிய மக்கள் சக்தி) அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை கடக்கவுள்ள இந்த நேரத்தில், அரச நிறுவனங்கள் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டுச் செயற்படுவது முக்கியமானதாக மாறியுள்ளது. வரலாறு நெடுகிலும் மாறி மாறி வந்த அரசாங்கங்களின் அரசியல் நியமனங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் அரச நிறுவனங்களில் அதிகமாக இருந்தன. தற்போது, தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படுவதால், நிறுவனங்களின் செயற்பாடுகள் மாற்றமடைந்து வருகின்றன.

ஆனாலும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது தொடர்பாக, முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சூழலில், NPP அரசாங்கம் தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய முயற்சிப்பதும் அதற்கான நடைமுறையில் இறங்கியிருப்பதும் அரச நிறுவனங்கள் சம்பந்தமாக அநுர அரசு எடுக்கவிருக்கும் மாற்றத்தினைக் காட்டுவதாக உள்ளது.

ஊழலற்ற கிளீன் ஸ்ரீ லங்காவை (Clean Sri Lanka) கட்டி யெழுப்பும் நோக்கோடு பொலிஸ் ஆணைக்குழுவும், நீதித்துறையும் சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசு (NPP) அரச நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளைக் குறைத்து, வினைத்திறனை (Efficiency) அதிகரிப்பதை மையமாகக் கொண்டு முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது.

அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என அவரவருக்கு தகுதியான இடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து, வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படுகின்றது. அத்தோடு, செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில், IMFஇன் நிபந்தனைகளுக்கு அமைவாக, நட்டமடையும் அரச நிறுவனங்களை மூடுவதோ அல்லது தனியார் மயப்படுத்துவதோ அல்லாமல், அவற்றை மறு சீரமைத்து இலாபம் ஈட்டும் நிலைக்குக் கொண்டுவர அவதானம் செலுத்துவதில் NPP அரசு தனது முதல் அடியினை சரியாக நகர்த்தி வருகின்றது என்றே சொல்லலாம்.

நிறுவனங்களை திறமையாகவும், ஊழலற்ற முறையிலும், ஒழுக்கமாகவும் நிர்வகித்து, இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும். அரச நிறுவனங்கள் மக்களின் பணத்தினால் நடத்தப்படுவதால், அவை மக்களுக்குச் சுமையாக அமையக்கூடாது. அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் வாகனங்கள், நிதி மற்றும் பிற வளங்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையை செயற்படுத்த முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கவும் ஊழலை ஒழிக்கவும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியும் வருகின்றது.

மக்களின் மனங்களில் மாற்றத்தினை கொண்டு வருவதோடு, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழல், மோசடிகளை ஒழித்து, பொறுப்புக் கூறக்கூடிய நிர்வாகத்தை ஏற்படுத்துவதே இதன் பிரதான இலக்காகும். மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பை சீரமைத்தல். அரச நிறுவனங்களில் பின்பற்றப்பட்டு வரும் சர்வாதிகாரப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதனூடாக பொருளாதார கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை அரசாங்கத்தினால் ஏற்படுத்தலாம்.

ஆகவே மக்கள் எழுச்சிக்கு பிற்பாடு புதிய அநுர தலைமையின NPP அரசிடம் நாடு கையளிக்கப்பட்டதற்கு பிற்பாடு நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால்; ‘சிஸ்டம் சேஞ்ச் (System Change) க்காக எடுக்கப்படவிருக்கும் சகல நடவடிக்கைகளும் சரியான முறையில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கமும், அரச நிறுவனங்களும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதில் நிலையான புரிந்துணர்வு உருவாக்கப்பட வேண்டும்.

அரசாங்கமும் அரச நிறுவனங்களும் பொதுமக்களுக்குச் சேவையாற்றும் முதன்மைப் பொறுப்பைக் கொண்டிருப்பதால், அவை திறமையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புக் கூறலுடனும் செயற்பட வேண்டியது முதன்மையானதாகும். அரச நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள், நிதிப் பயன்பாடுக் கொள்கைகள் மற்றும் நடை முறைப்படுத்தல் தொடர்பான தகவல்கள் பொது மக்களுக்கு வெளிப்படையானதாக இருப்பது அவசியம்.

எனவே, ஒரு நாட்டின் வெற்றி, அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அரசாங்கமும் அரச நிறுவனங்களும் மிக முக்கிய பங்காற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. அதனடிப்படையில், மக்களுடைய வரிப்பணத்தில் இயங்கும் சகல துறையினரும் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதையும், நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்கள், அரசியல் தலையீடுகள் இன்றி, தொழில்சார் நிபுணத்துவத்துடன் செயற்படும்போது மட்டுமே நாட்டின் வெற்றியை உறுதி செய்ய முடியும். இதையே தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக ‘சிஸ்டம் சேஞ்ச்'(System Change) எனும் கொள்கைப் பிரகடனத்தினூடாக போராடுகின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *