இலங்கை கிரிக்கெட்டுக்கு தேசிய ஒலிம்பிக் குழுவில் வாக்குரிமை

1 Min Read

தேசிய ஒலிம்பிக் குழுவில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு முழு அங்கத்துவம் வழங்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 2030–34 தேசிய ஒலிம்பிக் குழு தேர்தலில் இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு வாக்குரிமை கிடைக்கவுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழு பொதுக் குழு கூட்டத்தின்போதே இலங்கை கிரிக்கெட்டுக்கு முழு அங்கத்துவம் வழங்க ஒப்புதல் கிடைத்தது. 1937 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய ஒலிம்பிக் குழுவில் இலங்கை கிரிக்கெட்டுக்கு முழு அங்கத்துவம் வழங்கப்படுவது இது முதல்முறையாக உள்ளது. 2028 இல் நடைபெறவுள்ள லொஸ் ஏஞ்சல் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட்டே இடம்பெறவுள்ளது. இது நூற்றாண்டின் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறும் முதல் சந்தர்ப்பமாக அமையவுள்ளது.

இதன்படி தேசிய ஒலிம்பிக் குழுவினால் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலிலும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வாக்குரிமை வழங்கப்படும் என்று அதன் பொதுச் செயலாளர் ரிப்தி பஹ்மி குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை தவிர, இலங்கை ஸ்குவஷ் சம்மேளனமும் தேசிய ஒலிம்பிக் குழுவின் முழு அங்கத்துவத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 அன்று இடம்பெற்ற தேசிய ஒலிம்பிக் குழு புதிய நிர்வாகக் குழு தேர்தலின்போது 28 விளையாட்டு சங்கங்கள் வாக்குரிமை பெற்றிருந்தன. அதில் ஒலிம்பிக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரும் வீரர்கள் ஆலோசனை குழுவுக்கு மாத்திரம் தேர்தலில்இரு வாக்குகளை அளிக்க உரிமை வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *