பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ஆட்சியைத் தொடர்வேன் என சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்டாமர் கூறியுள்ளார்.
பிரதமர் ஸ்டார்மரின் ஆளும் மிதவாத இடதுசாரி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சுமார் 80 பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலகுவதற்கான கால அட்டவணையை நிர்ணயிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரியுள்ளனர்.
பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள போதிலும் ஆட்சியைத் தொடர்வதாக தனது அமைச்சரவையில் அவர் கூறியுள்ளார்.
தனது தலைமைக்கு எதிராக இதுவரை முறையான சவால் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று அவர், தனது சாத்தியமான போட்டியாளர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
ஆனால் மூன்று அமைச்சர்கள் பிரதமர் ஸடார்மரின் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் உள்துறை அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ், அதிகாரப் பகிர்வு, நம்பிக்கை மற்றும் சமூகங்களுக்கான அமைச்சர் மியாட்டா ஃபான்புல்லே, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைக் கையாள்வதற்கான அமைச்சர் டேவிஸ்-ஜோன்ஸ் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் முடிவுகளால் தொழிலாளர் கட்சிக்குள் இத்தகைய நெருக்கடி ஏற்பட வழிவகுத்துள்ளது. இந்தத் தேர்தல்களில், இங்கிலாந்து கவுன்சில்களில் 1,400 இற்கும் மேற்பட்ட இடங்களையும், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து பாராளுமன்றத் தேர்தல்களிலும் பெரும் இழப்புக்களையும் அக்கட்சி சந்தித்துள்ளது. தொழிலாளர் கட்சியின் இவ்வீழ்ச்சியால், தீவிர வலதுசாரியான ‘ரிஃபார்ம் பிரிட்டன்’ கட்சி பெரிதும் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



