ஹன்டா வைரஸ் தொற்றுக்குள்ளான கப்பலின் பயணிகள் ஸ்பெய்னில் இறக்கம்

1 Min Read

கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃபே துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்த, ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலிலிருந்த பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கையை ஸ்பெயின் நேற்று ஆரம்பித்தது.

நேற்று காலையில் மருத்துவக் குழுக்கள் கப்பலில் ஏறி, பயணிகளுக்கு இந்நோய் அறிகுறிகள் காணப்படுகிறதா? எனப் பரிசோதித்தனர். அதனைத் தொடர்ந்து பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நடவடிக்கை சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்றும், எம்.எஸ். ஹொண்டியஸ் கப்பலில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் இன்னும் நோயறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்துள்ளார்.

முழுமையான அபாயப் பாதுகாப்பு உடைகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்த ஸ்பானிய மருத்துவ அதிகாரிகளும் இராணுவத்தினரும் மாத்திரமல்லாமல் பயணிகளுக்கும் அபாயப் பாதுகாப்பு உடைகளை அணிவித்து சிறு சிறு குழுக்களாகச் சிறிய படகுகளில் ஏற்றி, அவர்களைக் கரைக்கு அழைத்து வந்தனர். முதல் கட்ட வெளியேற்றம் இடம் பெற்றபோது, ​​வெள்ளை நிற மருத்துவ முகக்கவசங்களை அணிந்திருந்த பயணிகள் அனைவரும் கப்பலின் மேல் தளத்திலோ அல்லது ஜன்னல்களிலோ சுற்றித் திரிவதை ஒரு நீண்ட கேமரா லென்ஸ் மூலம் அவதானிக்க முடிந்தது.அவர்கள் கரையை நெருங்கியபோது, சிறிய படகுகளில் சமூக இடைவெளியைப் பேணி அமர்ந்தபடி, படம்பிடித்தும் புகைப்படங்கள் எடுத்தும் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் தேசியத்தின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கரையில், வெள்ளை நிறப் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த அதிகாரிகள் அவர்களைச் சந்தித்தனர்.இவர்கள் பஸ் மூலம் உள்ளூர் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர். கடந்த மாதம் ஆர்ஜென்டினாவிலிருந்து இக்கப்பல் புறப்பட்டதிலிருந்து, மூன்று பேரின் மரணங்கள் ஹன்டா வைரஸுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இவ்வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான எலிகளின் சிறுநீர் அல்லது மலத்தின் ஊடாக வைரஸ் பரவுவதாக நம்பப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பின் படி, இது பொதுமக்களுக்கு குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தக்கூடியதாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *