ஐபிஎல் தொடரில் ஆடிவரும் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, மீறினால் தடை உட்பட பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஐபிஎல் இல் ஆடி வரும் பல வீரர்கள் தங்கள் பெண் நண்பிகளுடன் வருகிறார்கள்;, தாங்கள் தங்கும் ஹோட்டல் அறைகளுக்கு அவர்களை அழைத்து செல்கிறார்கள் என்பன உட்பட பல்வேறு புகார்கள் அண்மைக் காலமாக எழுந்துள்ளன. இதற்கு முடிவு கட்டும் வகையில் இந்திய சபை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 7 பக்கங்கள் கொண்ட விதிமுறைகள் அடங்கிய கையேட்டை, ஐபிஎல் இல் இடம்பெற்றுள்ள 10 அணிகளுக்கும் இந்திய சபை செயலாளர் தேவஜித் சைக்கியா அனுப்பி உள்ளார். ஐபிஎல் இல் ஆடிவரும் வீரர்களுடன் அழகிகளை பழகவிட்டு வீரர்களை சிக்கவைக்கும் அபாயம் உள்ளது என்றும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஹோட்டல் அறைகளில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும் யாராவது தவறு இழைத்தது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கையேட்டில் கூறப்பட்டுள்ளது.



