ஈரானிய ஆயுத தயாரிப்புக்கு உதவும் நிறுவனங்களுக்கு தடை

1 Min Read

ஈரானின் ஆயுதத் தயாரிப்பு துறைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஷாஹெட் ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தேவையான ஆயுதங்களையும் மூலப்பொருட்களையும் பெறுவதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு உதவியதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரியினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஹொங்கொங்கைச் சேர்ந்த பல நிறுவனங்கள் உட்பட 10 தனிநபர்கள் மீது இவ்வாறு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திறைசேரி விடுத்துள்ள அறிக்கையில், தெஹ்ரான் தனது ஆயுத உற்பத்தித் திறனை மீண்டும் அடைவதைத் தடுப்பதற்காக, ஈரானின் இராணுவக் கைத்தொழில் துறைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஈரானிய வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கும் விமான நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும், சீனாவின் சுதந்திரமான ‘டீபாட்’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அடங்கலாக, ஈரானின் முயற்சிகளுக்கு உதவும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிக்கப்படவிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில் இந்நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *