இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் வெற்றிக்காக தம்புள்ளை மற்றும் கொழும்பு அணிகள் இன்று (07) போட்டியிடவுள்ளன.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 299 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் சரித் அசலங்க தலைமையிலான கொழும்பு அணி நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 39.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி இந்தப் போட்டியில் வெற்றிபெற கொழும்பு அணி இன்னும் 145 ஓட்டங்களைப் பெற வேண்டி இருப்பதோடு தம்புள்ளை அணி இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியுள்ளது.
இதில் கொழும்பு அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய லஷான் 84 ஓட்டங்களைப் பெற்றார். சரித் அசலங்க 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் மொஹமட் ஷராஸுடன் கவிந்து பத்திரத்ன, அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் தம்புள்ளை அணி முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் கொழும்பு முதல் இன்னிங்ஸுக்காக 146 ஓட்டங்களையே சேர்த்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் தம்புள்ளை 222 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



