NPP அரசாங்கத்தில் மலையக மக்கள் பாதுகாக்கப்படுவர்

2 Min Read

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மலையக மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், அவர்களுக்கான உரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் காவத்தை நீலகாமம் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பு ஒன்று உடைக்கப்பட்டு தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படுவதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்கள் காலங்காலமாக உறிஞ்சப்பட்டு தொடர்ச்சியாக அவர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுபோன்றே அண்மையில் காவத்தை பிரதேசத்தில் நீலகாமம் தோட்டத்தில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொழிலாளி ஒருவர் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக தோட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில் அது கிடைக்காத பட்சத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடம் ஒன்றில் அவர் குடிசை ஒன்றை கட்டியிருந்தார்.

இதன்போது மேற்படி தோட்ட நிர்வாகம் சட்ட ரீதியில் பொலிஸ் மூலமாக நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடமுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவைக் கொண்டு கட்டப்பட்டிருந்த அந்த குடிசை வீட்டின் மீது தாக்குதலை நடத்தி அங்குள்ள தொழிலாளர்கள் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேற்படி சம்பவத்தை கேள்விப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாம் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல. தொடர்ச்சியாக மலையக பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன என்பதை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

குறிப்பாக கேகாலை, நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர்கள் தமக்கான குடியிருப்பு ஒன்றை நிர்மாணிக்கும் போதும் மலசல கூடம் ஒன்றை அமைக்கும்போதும் கூட தொடர்ச்சியாக அந்த மக்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.

இதுவரை காலமும் இதுபோன்ற சம்பவங்கள் மலையகப் பகுதியில் நடக்கும் போது அங்குள்ள அரசியல் தலைவர்கள் நேரடியாக அங்கு சென்று கண்காட்சியையே நடத்துவார்கள். ஆனால் இந்தமுறை இரத்தினபுரி பகுதி சம்பவம் நடைபெற்று 8 மணித்தியாலங்களுக்குள் நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

நாம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கான காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையே அந்த மக்கள் முன்வைக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *