ஆட்ட நிர்ணய புகார் குறித்து கனடா அணி மீது விசாரணை

1 Min Read

இலங்கை மற்றும் இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் கனடா கிரிக்கெட் சபை மீது சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

கனடாவின் பிரபல புலனாய்வு நிகழ்ச்சியான ‘தி பிஃப்த் எஸ்டேட்’ தயாரித்த ‘ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்’ என்ற ஆவணப்படம் இந்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. அதில், உலகக் கிண்ண தொடரின்போது கனடா அணி விளையாடிய சில போட்டிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சென்னையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கனடா அணியின் தலைவர் தில்பிரீத் பாஜ்வா வீசிய ஒரு ஓவர் ஐ.சி.சியின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அந்தப் போட்டியில் கனடா நிர்ணயித்த 173 ஓட்டங்கள் என்ற இலக்கை நியூசிலாந்து துரத்தியது. ஆரம்பத்தில் கனடா வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ஓட்டங்களைக் கட்டுப்படுத்தினர். ஆனால், 5ஆவது ஓவரை பாஜ்வா வீசினார். அந்த ஒரே ஓவரில் ஒரு நோ போல் மற்றும் லெக் பக்கமாக வீசப்பட்ட இரண்டு வைட் பந்துகள் உட்பட 15 ஓட்டங்களை அவர் வாரி வழங்கினார். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்ட நிர்ணயம் மட்டுமின்றி, கனடா கிரிக்கெட் சபையின் உயர்மட்ட நிர்வாகிகள் வீரர்கள் தேர்விலும் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்குமாறு பயிற்சியாளர்களுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி கூறுகையில், ‘ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து நாங்கள் அறிவோம். தற்போது விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், அதன் தன்மை குறித்து விரிவான தகவல்களை வெளியிட முடியாது. கிரிக்கெட் விளையாட்டின் நேர்மையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *