இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து விரைவில் ஓய்வு பெற மாட்டார் என்று மகளிர் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெம்மி சிடன்ஸ் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை மகளிர் அணியின் புதிய திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 16 ஆண்டுகளாக அணியில் நிலையான இடம்பிடித்திருக்கும் 36 வயது சமரி அத்தபத்துவின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக 2025 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி முடிவுக்கு பின்னர் அத்தபத்துவின் ஓய்வு தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வந்தது. எனினும் அவர் அடுத்த டி20 பருவம் வரை ஆடுவார் என்று சிடன்ஸ் தெரிவித்தார்.
‘சமரியுடன் நான் நன்கு பேசினேன். அவர் ஓரிரு ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவது முக்கியமாக உள்ளது’ என்று குறிப்பிட்ட சிடன்ஸ், அவர் தனது தற்போதைய உடல் தகுதி நிலை மற்றும் தற்போது போன்றே கடுமையாக உழைத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருக்காது’ என்றார்.
கொழும்பு, சி.சி.சி. மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சிடன்ஸ் இதனைத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூனில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கு இலங்கை அணி தயாராகி வரும் நிலையில் அத்தபத்து அணிக்கு முக்கியமானவராக கருதப்படுகிறார். அண்மைக் காலத்தில் சோபித்து வரும் அவர் அண்மையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வெல்வதற்கும் அணிக்கு தலைமை வகித்தார்.

‘கடந்த இரு பயிற்சிப் போட்டிகளிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி இருந்தார். அவருக்கு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஆட முடியும்’ என்றார் சிடன்ஸ். அணியின் முக்கிய வீராங்கனையாக இருக்கும் அத்தபத்து தொடர்ந்து அணியில் நிலைத்திருப்பது அடுத்த தலைமுறையை மேம்படுத்த உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மார்ச் 16 ஆம் திகதி இலங்கை மகளிர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற சிடன்ஸ், அவுஸ்திரேலிய ஆடவர் அணிக்கு பயிற்சி அளித்திருப்பதோடு பல உலகக் கிண்ணங்களிலும் பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவம் பெற்றவராவார். அவரின் பயிற்சியின் கீழ் இலங்கை மகளிர் அணி முதல் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காக இம்மாத நடுப்பகுதியில் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இலங்கை அணி தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.
‘இந்த பெண்கள் திறமை பெற்றவர்கள், அவர்களின் மனநிலையை மேம்படுத்துவது மாத்திரமே தேவையாக உள்ளது. அவர்களும் மனிதர்கள் தான்;, அவர்களாலும் (நியூசிலாந்து வீராங்கனை) அமெலியா கெர்ரைப் போன்று சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும். அவர்களை சுதந்திரமாக செயல்பட விடுவதும், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதும், மேலும் அவர்களைச் சற்றே தைரியமாக இருக்கத் தூண்டுவதுமே என் வேலை’ என்று சிடன்ஸ் கூறினார்.




