இலங்கை கிரிக்கெட் தேசிய அணி ஒப்பந்த வீரர்களில் வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பத்திரண உட்பட 15 வீரர்கள் தொடர்ந்தும் கட்டாய உடல் தகுதி சோதனையில் பங்கேற்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. மேலும் ஆறு வீரர்கள் உடல் தகுதிச் சோதனைக்கான முதல் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளனர். இதன்படி 45 மத்திய ஒப்பந்த வீரர்களில் 24 பேர் மாத்திரமே இதுவரை உடல் தகுதிச் சோதனையில் வெற்றியீட்டி உள்ளனர்.
இதில் உடல் உபாதை அல்லது பங்கேற்பதில் உள்ள ஏற்பாட்டியல் பிரச்சினை காரணமாகவே இன்னும் இந்த வீரர்கள் உடல் தகுதி சோதனையில் கலந்துகொள்ளாமல் உள்ளனர். இதில் ஹசரங்க மற்றும் பத்திரண இருவரும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முறையே லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருப்பதால் விரைவில் அதில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது.

ஹசரங்கவின் நிலை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதோடு, அவர் விரைவில் போட்டிகளில் பங்கேற்பது சாத்தியம் இல்லாதது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. மறுபுறம் ஹசரங்க ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு, ‘இன்னும் தடையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவில்லை’ என்று இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி20 உலகக் கிண்ணத்தில் கடந்த பெப்ரவரியில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இலங்கை அணியின் முதல் போட்டியின்போதே ஹசரங்கவின் இடது பின் தொடை பகுதியில் உபாதை ஏற்பட்டது. அது தொடக்கம் அவர் போட்டிகளில் ஆடவில்லை. அவர் தனது உடல் தகுதி சோதனையை எதிர்கொள்வது எப்போது என்பதில் இன்னும் உறுதி இல்லாமல் உள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண போட்டியின்போது காலின் பின்புற தசைப் பகுதியில் காயத்திற்கு உள்ளான பத்திரண தற்போது வலையில் பந்துவீசி வருவதாக தெரியவருகிறது. விரைவாக குணமடைந்து வரும் அவர் ஏப்ரல் நடுப்பகுதியில் தனது ஐபிஎல் அணியில் இணைய திட்டமிட்டுள்ளார். எனினும் இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டாய உடல் தகுதி சோதனைக்கு அவர் பங்கேற்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ திகதி ஒன்றும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் அடுத்த வாரத்தில் அவர் அந்த சோதனையில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் வீரர்களுக்கும் உடல் தகுதிச் சோதனையை தற்போது கட்டாயமாக்கி உள்ளது. குறிப்பாக கடந்த திங்கட்கிழமை (06) ஆரம்பமான தேசிய சுப்பர் லீக் தொடரிலும் இந்த கலாசாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த சோதனை குறைவான அம்சங்களை கொண்டுள்ளது. உள்ளூர் வீரர்கள் 2 கிலோமீற்றர் ஓட்டம் மற்றும் உடல் மடிப்புச் சோதனையில் மாத்திரமே பங்கேற்க வேண்டி உள்ளது. இதில் புள்ளிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பதோடு சாதாரணமான குறைந்தபட்ச வரம்புகளை கடந்தால் போதுமானதாகும்.
எனினும் மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் 20 மீற்றர் வேக ஓட்டம், வீரர்களின் வேகமான திசை மாற்றத் திறனை சோதிக்கும் 5-0-5 சுறுசுறுப்பு சோதனை மற்றும் எதிர் இயக்கத்துடன் செய்யும் உயரத் தாண்டல் சோதனை போன்ற கடினமாக சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதில் ஒவ்வொன்றுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து வரை புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 2 கிலோமீற்றர் ஓட்டம் மற்றும் உடல் மடிப்புச் சோதனைக்கு தலா ஏழு புள்ளிகள் வரை பெற முடியும். இந்த ஒட்டுமொத்த சோதனையில் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் 29 புள்ளிகளில் குறைந்தது 17 புள்ளிகளைப் பெற வேண்டும்.
தேசிய சுப்பர் லீக்கில் மொத்தமாக 87 வீரர்கள் பங்கேற்றிருப்பதோடு 23 வீரர்கள் குறைந்த உடல் தகுதியை நிரூபிக்க தவறியுள்ளனர். அதில் தேர்ச்சி பெறுவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் தோல்வி அடைந்தால், அவர்கள் தொடரில் தொடர்ந்து ஆட அனுமதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கான போட்டிக் கட்டணம் நிறுத்தப்படவுள்ளது. அதேபோன்று அந்த வீரர்கள் எதிர்கால தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகும்.




