இலங்கை–இந்திய டெஸ்ட் தொடர் ஓகஸ்ட் 15இல் காலியில் ஆரம்பம்

1 Min Read

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஓகஸ்ட் 15 தொடக்கம் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தின் ஓர் அங்கமாகவே இந்த டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மைதானம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பெரும்பாலும் அந்தப் போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணி ஒன்பது ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக அமையவுள்ளது.

2017 இல் விராட் கொஹ்லி தலைமையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரு டெஸ்ட் போட்டிகள் தவிர, இந்திய அணி இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் ஆட வாய்ப்பு உள்ளது.

அது பற்றி விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் தேவ்ஜித் செய்கியா குறிப்பிட்டுள்ளார். இலங்கை பிரீமியர் லீக் எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளை நடத்துவதை விட, டெஸ்ட் தொடர் முடிந்த பின் டி20 சர்வதேசப் போட்டிகளை அட்டவணையில் சேர்ப்பது நடைமுறைக்கு ஏற்றதாகத் தெரியவருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *