திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, தவெக தலைவரும், முதல்வருமான விஜய் இன்று (ஜூன் 1) திருச்சி வருகிறார். தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 1) திருச்சி வருகிறார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வரும் முதல்வர், மாலை 4 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்துப் பேசுகிறார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். முதல்வர் விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வாகனத்தில் வரும்போது, அவரது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.



