கனிம வளம் கொழிக்கும் இந்தியாவின் கிழக்கு பிராந்தியங்கள் முதல் செழிப்பாக விளங்கும் மேற்கு துறைமுகங்கள் வரையிலான பரந்த தொழிற்துறைப் பகுதிகளில், ஒரு அமைதியான அதே சமயம் மிக முக்கியமான மாற்றம் வடிவெடுத்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் உற்பத்தித் திறனை மட்டுமே கொண்டு மதிப்பிடப்பட்ட இரும்பு ஆலைகள், தற்போது தொழில்துறை விரிவாக்கத்தையும் சுற்றுச்சூழல் பொறுப்பையும் ஒன்றாக இணைக்கும் ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக விளங்குவது, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இரும்பு துறையாகும். இத்துறை தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இனிவரும் காலங்களில் வளர்ச்சி என்பது வெறும் உற்பத்தி அளவை மட்டும் வைத்து மதிப்பிடப்படாமல், அதன் ‘நிலைத்தன்மை’ மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பொறுத்தே அமையும். இது தொழில் துறையின் முன்னுரிமைகளில் ஏற்பட்டுள்ள ஆழமான பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் இந்த லட்சியங்கள் உத்தேச “தேசிய இரும்பு கொள்கை 2025” இல் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதன்படி, தற்போது சுமார் 168 மில்லியன் தொனாக இருக்கும் நாட்டின் இரும்பு உற்பத்தித் திறனை, 2035-36 ஆம் ஆண்டிற்குள் 400 மில்லியன் தொன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கமானது நாட்டின் அதிவேக உள்கட்டமைப்பு வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் வலுவடைந்து வரும் உற்பத்தித் துறை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
இந்த பிரம்மாண்ட இலக்குகளை அடைய சுமார் 183.41 பில்லியன் டொலர் அளவுக்கு பெருமளவிலான முதலீடு தேவைப்படும். இந்த மூலதன வரவானது சுரங்கம், போக்குவரத்து முதல் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வரை ஒட்டுமொத்த இரும்பு உற்பத்திச் சங்கிலியையும் ஊக்கப்படுத்தி, பரவலான தொழில்துறை வேகத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரும்பு துறை ஏற்கனவே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.5 சதவீத பங்களிப்பை வழங்குவதோடு, கிட்டத்தட்ட 28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருகிறது. தற்போது திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் என்றும், 2035-36க்குள் கூடுதலாக 30 இலட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இது இத்துறையின் சமூக-பொருளாதார முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த அசுர வளர்ச்சிக்கு இணையாக, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முறையான ஒரு பாதையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒரு தொன் இரும்பு தயாரிப்பிற்கு சுமார் 2.65 தொன் கார்பன் டை ஆக்சைடு உமிழப்படும் நிலையில், புதிய கொள்கையின் மூலம் 2035-36க்குள் அதை 2 தொன் ஆகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் எஃகு உற்பத்தித் துறை மட்டுமே 10% முதல் 12% வரை பங்களிக்கிறது என்பதால், இந்த மாற்றம் மிக அவசியமான ஒன்றாகும். இந்த கார்பன் அளவைக் குறைப்பது, 2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வற்ற நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் பரந்த உலகளாவிய உறுதிப்பாட்டோடு ஒத்துப்போகிறது.
இந்த சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதற்காக, தூய்மையான உற்பத்தி முறைகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. நிலக்கரியைப் பெருமளவில் பயன்படுத்தும் பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக, கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைக்கும் எரிவாயு அடிப்படையிலான இரும்பு தயாரிப்பு முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இந்த மாற்றத்தில் தீர்க்கமான பங்காற்றவுள்ளன. நாடு முழுவதும் தூய்மையான மற்றும் திறமையான இரும்பு உற்பத்தியை சாத்தியப்படுத்த, எரிவாயு குழாய் வலையமைப்புகுகளை விரிவாக்குவது, தடையில்லா ஆற்றல் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் தொழில்துறை அமைப்புகளை வலுப்படுத்துவது ஆகியவை மிக அவசியமான தேவைகளாகும்.



