பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று ( 20) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நுவன் மதுசங்க இந்த விபத்துச் சம்பவம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
குழாய் கிணறுகளைப் பழுதுபார்க்கும் பணியாளர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு வந்த லொறி ஒன்று பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த லொறியில் வந்த 28 வயதுடைய தொழில்நுட்பப் பணியாளர் (இளைஞர்) ஒருவர், லொறியை விட்டு கீழே இறங்கி அதன் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், அதற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிப்பதற்காகப் புறப்படத் தயாராக இருந்த தனியார் பஸ் ஒன்றின் எஞ்சினை (Engine), அதன் காற்று அழுத்தத்தை (Air/Vacuum) அதிகரிப்பதற்காக சாரதி ஆன் செய்து (Start) வைத்துள்ளார். பின்னர் சாரதி பஸ்ஸை விட்டு கீழே இறங்கிச் சென்றிருந்த வேளையில், சாரதி இல்லாத அந்தப் பஸ் திடீரெனத் தானாக முன்னோக்கி நகர்ந்து சென்று, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பலமாக மோதியுள்ளது.
லொறிக்கு அருகில் நின்று கொண்டிருந்த தொழில்நுட்பப் பணியாளரான இளைஞர், எதிர்பாராத விதமாக முன்னோக்கி வந்த பஸ்ஸிற்கும் லொறிக்கும் இடையில் சிக்கி நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பஸ்ஸின் எஞ்சினை ஆன் செய்துவிட்டு, சாரதி ஆசனத்தில் இல்லாததே இந்த விபத்திற்கு முழுக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தனியார் பஸ்ஸின் சாரதியை சந்தேகத்தின் பேரில் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



