பயங்கரவாதத்தை முறியடிப்பதையும் தாண்டி, வருங்கால சந்ததியினருக்காக ஒரு வளர்ச்சியடைந்த, அமைதியான மற்றும் நீதியான தேசத்தைக் கட்டியெழுப்புவதே நாட்டின் போர் வீரர்களின் இலட்சியங்களென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நேற்று (19) நடைபெற்ற 17ஆவது தேசிய படை வீரர்கள் நினைவு நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி, இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி;
நாட்டில் நீடித்த அமைதியைப் பாதுகாத்து தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்திலிருந்து தேசத்தை விடுவிப்பதற்கும், இலட்சக்கணக்கான குடிமக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் ஆயுதப் படைகள் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். இவர்களின் சேவைகளை நினைவு விழாக்கள் மூலம் மட்டுமல்லாமல், முற்போக்கான மற்றும் வளர்ச்சியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் மூலமாகவும் கௌரவிக்க வேண்டும்.
மோதல்களின்போது,குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் உட்பட அன்புக்குரியவர்களை இழந்த வலியை இன்னும் பல குடும்பங்கள் சுமந்து நிற்கின்றன. இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாதுள்ள நிலைமையை உறுதி செய்ய வேண்டும். தேசிய ஒற்றுமையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறேன். பிரிவினைவாதத்திற்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது. எந்தவொரு இனத்துக்கோ, சமூகத்திற்கோ எதிராக யுத்தம் நடத்தப்படவில்லை.
இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது. இன அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகளை நிராகரிக்கிறோம். பேரிடர் மீட்பு மற்றும் தேசிய அவசரநிலைகளில் ஆயுதப் படைகளின் பங்களிப்பைப் பாராட்டுக்குரியது. சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை நிலைநிறுத்தும் அதே வேளையில், இலங்கையின் சர்வதேச நிலையை வலுப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



